< Back
தேசிய செய்திகள்
டெல்லி:  3-வது நாளாக மூடப்பட்ட திக்ரி, சிங்கு எல்லைகள்; போக்குவரத்து பாதிப்பு
தேசிய செய்திகள்

டெல்லி: 3-வது நாளாக மூடப்பட்ட திக்ரி, சிங்கு எல்லைகள்; போக்குவரத்து பாதிப்பு

தினத்தந்தி
|
15 Feb 2024 12:46 PM IST

திக்ரி மற்றும் சிங்கு எல்லைகளில் தடுப்பான்கள், சுருள் கம்பிகள் மற்றும் கான்கிரீட் தடுப்புகள் ஆகியவற்றை கொண்டு டெல்லி போலீசார், பல்வேறு அடுக்குகளாக தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர்.

புதுடெல்லி,

வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிப்பது, கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் 3-வது நாளாக இன்றும் தொடர்கிறது.

அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு வாபஸ் பெற்றது. அதே சமயத்தில் வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் விவசாயிகள் போராட்டமும் வாபஸ் பெறப்பட்டது.

இந்த சூழலில், டெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்துக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்தன. பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் டெல்லிக்கு படையெடுத்தனர்.

இந்நிலையில், அவர்களை பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு இன்று அழைப்பு விடுத்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

இந்த நிலையில், டெல்லியின் மத்திய பகுதியில், நாடாளுமன்றத்திற்கு செல்ல கூடிய அனைத்து சாலைகளிலும் மற்றும் பிற பதற்றம் நிறைந்த பகுதிகளிலும், போலீசார் தடுப்பான்களை வைத்து தடுப்புகளை அமைத்து உள்ளனர். டெல்லி மற்றும் அரியானா இடையேயான சிங்கு மற்றும் திக்ரி ஆகிய இரு எல்லை பகுதிகள் தொடர்ந்து இன்றும் மூடப்படுகின்றன.

பஞ்சாப் மற்றும் அரியானா இடையே அம்பாலா பகுதியில் ஷம்பு எல்லையை நோக்கி வந்த விவசாயிகளை அரியானா போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். எனினும், டெல்லி போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதனால் போக்குவரத்து தடைப்படும். அந்த பகுதிகளில், வன்முறைக்காரர்களை தடுக்கும் விதத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். திக்ரி மற்றும் சிங்கு எல்லைகளில், தடுப்பான்கள், சுருள் கம்பிகள் மற்றும் கான்கிரீட் தடுப்புகள் ஆகியவற்றை கொண்டு பல்வேறு அடுக்குகளாக தடுப்புகளை ஏற்படுத்தி, விவசாயிகள் டெல்லிக்குள் வரவிடாத வகையில் டெல்லி போலீசார் தடுத்து உள்ளனர்.

எனினும், உத்தர பிரதேசத்திற்கு உட்பட்ட காஜிப்பூர் எல்லையின் வழியே வாகனங்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வாகனங்கள் செல்ல வழிவிடுகின்றனர்.

10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான சி.பி.எஸ்.இ. வாரிய தேர்வுகள் இன்று தொடங்கி நடைபெறும் சூழலில், மாணவர்கள் போக்குவரத்து பாதிப்பில் சிக்காமல் இருக்க, அரை மணிநேரம் முன்பே தேர்வறைக்கு வரும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.

சிங்கு எல்லையில், அதிக அலைவரிசையுடன் கூடிய சத்தம் எழுப்ப கூடிய சாதனம் ஒன்றும் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. நீண்ட தொலைவு ஒலியியல் உபகரணம் (எல்.ஆர்.ஏ.டி.) என அந்த சாதனத்திற்கு பெயரிடப்பட்டு உள்ளது. கூட்டத்தினரை கலைந்து போக செய்ய உதவியாக இந்த சாதனம் உபயோகப்படும்.

கடந்த கால அனுபவங்களை முன்னிட்டு, இந்த முறை பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன என மூத்த டெல்லி காவல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்