பெண் தோழிக்கு விலையுயர்ந்த பரிசுகள் வாங்குவதற்காக செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது
|தனது பெண் தோழிக்கு விலையுயர்ந்த பரிசுகளை வாங்குவதற்காக செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 18 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
தனது பெண் தோழிக்கு விலையுயர்ந்த பரிசுகளை வாங்குவதற்காக செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 18 வயது இளைஞர் கிழக்கு டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் டெல்லியில் உள்ள சுந்தர் நகரியில் வசிக்கும் கைஃப் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முன்னதாக வியாழக்கிழமை, கைஃப் தனது நண்பருடன் சேர்ந்து, சாலையில் நின்று போனில் பேசிக்கொண்டிருந்த ஒருவரின் செல்போனை பறித்துவிட்டு ஸ்கூட்டரில் தப்பி சென்றுள்ளார். இந்த நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை, திருடிய செல்போனை விற்க கைஃப், சுந்தர் நகரி வந்த போது போலீசார் அவரை கைது செய்தனர்.
இது குறித்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தனது பெண் தோழிக்கு விலையுயர்ந்த பரிசுகளை வாங்கி கொடுப்பதற்காக ஷாஹ்தாரா மற்றும் வடகிழக்கு டெல்லி பகுதியில் இது போன்று செல்போன்களை பறித்து, தெரியாத நபர்களிடம் நல்ல விலையில் விற்று வந்ததாக கூறியுள்ளார்.
அவரிடமிருந்து இரண்டு செல்போன்கள் மற்றும் ஒரு ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.