டெல்லி சிக்னேச்சர் பாலத்தில் இருந்து யமுனை ஆற்றில் குதித்து மாணவர் தற்கொலை
|டெல்லி சிக்னேச்சர் பாலத்தில் இருந்து யமுனை ஆற்றில் குதித்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
புதுடெல்லி,
டெல்லியின் திமர்பூர் பகுதியில் உள்ள சிக்னேச்சர் பாலத்தில் இருந்து மாணவர் ஒருவர் யமுனை ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த மாணவர் ரஜத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ரஜத் அப்பா, அம்மா மற்றும் இரண்டு சகோதரிகளுடன் டெல்லியின் காரவால் நகர் பகுதியில் வசித்து வந்துள்ளார். ரஜத் படித்துக் கொண்டே, கரோல் பாக்கில் வேலை செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலையில் வெளியே சென்ற ரஜத் வீடு திரும்பும் போது யமுனையில் குதித்தார்.
இதையடுத்து டைவர்ஸ் உடனடியாக தண்ணீரில் குதித்து ரஜத்தை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் ரஜத் நீரில் மூழ்கிவிட்டார். சிறிது நேரம் கழித்து அவரது உடல் நீரில் இருந்து எடுக்கப்பட்டது.
ரஜத் ஏன் தற்கொலை செய்தார் என்பது குறித்து தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.