"ரூ.2 ஆயிரம் கடனுக்காக" 25 முறை கத்தியால் குத்தி வாலிபர் கொடூர கொலை - கும்பல் வெறிச்செயல்
|கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலில் 25-க்கும் மேற்பட்ட கத்திக்குத்து காயங்கள் இருந்துள்ளன.
புதுடெல்லி,
டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள பதர்பூர் போலீஸ் சரகத்தில் மெயின்ரோட்டை ஒட்டிய சர்வீஸ் சாலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில், 5 பேர் கொண்ட ஒரு கும்பல் வாலிபர் ஒருவரை கத்தியால் சரமாரியாக குத்திக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அந்த வழியாகச் சென்ற சிலர் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே, வாலிபர் கத்திக்குத்தில் மயங்கி சரிந்தார். இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் வாலிபரின் காலைப் பிடித்து ரோட்டில் தரதரவென இழுத்துச் சென்றது.
போலீசாரைப் பார்த்ததும் அந்த கும்பல் தப்பி ஓடியது. போலீசார் அவர்களை விரட்டிச் சென்று அருகில் உள்ள துக்ளாபாத் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே 3 பேரை பிடித்தனர். இதில் 2 பேர் சிறுவர்கள்.
இதற்கிடையே கத்திக்குத்தில் மயங்கிய வாலிபர் இறந்து விட்டார். அவரது உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் முழுவதும் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். தப்பி ஓடிய மற்ற 2 பேரையும் பிடித்தனர். இதிலும் ஒருவன் சிறுவன் ஆவான். பிடிபட்ட 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், இறந்து போன வாலிபர் கவுதம்புரியைச் சேர்ந்த லம்பு என்கிற கவுரவ் (வயது 22) என்பதும், இவர் கொலைக்கும்பலைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.2 ஆயிரம் கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தவில்லை என்றும் தெரியவந்தது. அதன்காரணமாக ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலில் 25-க்கும் மேற்பட்ட கத்திக்குத்து காயங்கள் இருந்துள்ளன. இத்தனை முறை கத்தியால் குத்தியதோடு மட்டுமின்றி, உடலை தரதரவென இழுத்துச் செல்லும் அளவுக்கு கொலைகார கும்பல் வெறித்தனமாக நடந்திருப்பது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.