டெல்லி: 8 கீர்த்தி சக்ரா, 29 சவுரியா சக்ரா விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்
|டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று நடந்த விழாவில் வீரதீர விருதுகளை வீரர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
புதுடெல்லி,
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று பாதுகாப்பு துறையில் வீரதீர செயல்களை புரிந்த வீரர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
இதுபற்றி பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், ஆயுத படைகள், மத்திய ஆயுத போலீஸ் படைகள் மற்றும் மாநில மற்றும் யூனியன் பிரதேச போலீசார் உள்ளிட்டோருக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி (முதல் கட்டம்) இன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், 8 கீர்த்தி சக்ரா விருதுகள் (உயிரிழந்த 5 வீரர்கள் உள்பட), 29 சவுரியா சக்ரா விருதுகளை (உயிரிழந்த 5 வீரர்கள் உள்பட) ஜனாதிபதி வழங்கினார் என தெரிவித்து உள்ளது.
இவற்றில், கேப்டன் ராகேஷ் டி.ஆர். என்பவர், 2022-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி நடந்த பொது பேரணி ஒன்றில் பிரதமர் மோடி மீது நடத்தப்பட இருந்த பயங்கரவாத தாக்குதலை தடுத்ததுடன், ஒரு பயங்கரவாதியையும் சுட்டு வீழ்த்தியதற்காக சவுரியா சக்ரா விருது வழங்கப்பட்டது.
இதேபோன்று, காஷ்மீரில் ஷோக்பாபா வன பகுதியில் 2021-ம் ஆண்டு வீரதீரத்துடன் செயல்பட்டதற்காக துணை நிலை தளபதியான மிருதுஞ்செய் குமாருக்கு சவுரியா சக்ரா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.