< Back
தேசிய செய்திகள்
உணவு, குடிநீர் தர விடாமல் டெல்லி போலீசார் சித்ரவதை; மல்யுத்த வீரர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
தேசிய செய்திகள்

உணவு, குடிநீர் தர விடாமல் டெல்லி போலீசார் சித்ரவதை; மல்யுத்த வீரர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
29 April 2023 11:12 AM IST

சுப்ரீம் கோர்ட்டு நெருக்கடியால் டெல்லி போலீசார் உணவு மற்றும் குடிநீர் தர விடாமல் சித்ரவதை செய்கிறார்கள் என மல்யுத்த வீரர் பூனியா பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு மற்றும் கூட்டமைப்பின் நிதி தவறாக பயன்படுத்தப்படுவது மற்றும் தவறான நிர்வாகம் உள்ளிட்ட விசயங்களை வலியுறுத்தி 3 மாதங்களுக்கு பின் டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் இந்தியாவின், சாதனை படைத்த உச்சபட்ச மல்யுத்த வீரர், வீராங்கனைகளான பஜ்ரங் பூனியா மற்றும் வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.

டெல்லியில் கடந்த ஜனவரி 18-ந்தேதி இதே கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், இதன்பின்பு கடந்த 23-ந்தேதி மீண்டும் போராட்ட களத்திற்கு அவர்கள் திரும்பி உள்ளனர்.

இதுபற்றி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் செய்தியாளர்களிடம் பேசும்போது, 3 மாதங்கள் கடந்து விட்டன. எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அதனாலேயே நாங்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கி இருக்கிறோம். எங்களுக்கு நியாயம் வேண்டும். இன்னும், எப்.ஐ.ஆர். கூட பதிவு செய்யப்படவில்லை. டெல்லி மகளிர் ஆணையம் எங்களுக்கு ஆதரவு அளித்து இருப்பதற்காக நன்றி தெரிவிக்கிறோம் என கூறினார்.

இந்த விவகாரத்தில் மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் மீது போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய தவறி விட்டனர். என கூறியுள்ளனர். நாங்கள் தொடர்ந்து மனஉளைச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். இது வீராங்கனைகளின் மரியாதை தொடர்பான விசயம். விளையாட்டு அமைச்சகத்திடம் இருந்து எந்தவித பதிலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. 3 மாதங்கள் கடந்தோடி விட்டன என அவர்கள் தெரிவித்தனர்.

சிறுமி உள்பட 7 இளம்பெண்கள் பிரிஜ்பூஷண் சிங்கிற்கு எதிராக காவல் நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தும் இன்னும் அது பதிவு செய்யப்படவில்லை. போக்சோ வழக்கும் பதிவாக வேண்டும் என கூறினர். தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி. உஷா கூறும்போது, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தெருக்களில் போராடுவது என்பது ஒழுங்கீனம். இந்தியாவின் மதிப்பை அது சீர்குலைக்கிறது என்று இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.

இதுபற்றி, சாக்ஷி மாலிக் கூறும்போது, பி.டி. உஷாவை நான் மதிக்கிறேன். அவர் எங்களுக்கு உத்வேகம் ஏற்படுத்தி இருக்கிறார். ஆனால், நான் கேட்க விரும்புவது, மேடம் மல்யுத்த வீராங்கனைகளான நாங்கள் முன்னே வந்து இருக்கிறோம். துன்புறுத்தல் விவகாரம் பற்றி எழுப்பி இருக்கிறோம். நாங்கள் போராட கூட கூடாதா...? என்று கேள்வி எழுப்பினார்.

இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு குழுவில் நாங்கள் எங்களுடைய வாக்குமூலங்களை அளித்து இருக்கிறோம். இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு குழு உறுப்பினர்களும் அதனை கேட்டு கொண்டனர். நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், உணவு மற்றும் குடிநீர் தர விடாமல் போலீசார் சித்ரவதை செய்கின்றனர் என மல்யுத்த வீரர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர். இதுபற்றி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான பஜ்ரங் பூனியா செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, டெல்லி போலீசார் உணவு மற்றும் குடிநீர் தர விடாமல் சித்ரவதை செய்கின்றனர். போராட்ட களத்தில் மின்சாரம் இணைப்பும் துண்டிக்கப்பட்டு விட்டது. போலீசார் எங்களிடம், நீங்கள் போராட விரும்பினால், சாலையில் படுத்து கொள்ளுங்கள் என கூறினர்.

அவர்களுக்கு என்ன வகையான நெருக்கடி இன்று வந்து விட்டது. இதற்கு முன்பு இதுபோன்ற பிரச்சனை எதுவும் இல்லை. சுப்ரீம் கோர்ட்டின் நெருக்கடியாலேயே இது ஏற்பட்டு உள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

நீதி வழங்கப்படும் வரை நாங்கள் போராடுவோம். போலீஸ் நிர்வாகம் எங்களை எந்த அளவுக்கு சித்ரவதை செய்தபோதும், எங்களுக்கு அதில் கவலையில்லை என்று பூனியா தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்