சமூக வலைத்தளங்களில் சர்ச்சை பதிவு: ஒவைசி உள்பட 31 பேர் மீது டெல்லி போலீஸ் வழக்கு
|சமூக வலைத்தளங்களில் சர்ச்சை பதிவிட்ட ஒவைசி உள்பட 31 பேர் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லி போலீசார் நேற்று 2 வழக்குகளை பதிவு செய்திருப்பதாக தெரிவித்தனர். நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பா.ஜனதா முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மற்றொரு வழக்கு, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதின் ஒவைசி எம்.பி., நீக்கப்பட்ட பா.ஜனதா பிரமுகர் நவீன்குமார் ஜிண்டால், சர்ச்சைக்குரிய துறவி யட்டி நரசிங்கானந்த் உள்பட 31 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பொது அமைதியை சீர்குலைக்கும்வகையிலும், மத உணர்வுகளை காயப்படுத்தும்வகையிலும் பதிவுகளை வெளியிட்டதாக ஒவைசி உள்பட 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.இதுகுறித்து கருத்து தெரிவித்த ஒவைசி எம்.பி., ''இந்த அச்சுறுத்தலுக்கு நான் பயப்பட மாட்டேன். வக்கீல்களுடன் ஆலோசனை நடத்துவேன். வெறுப்புணர்வை தூண்டுபவர்களையும், அதை விமர்சிப்பவர்களையும் ஒன்றாக கருதக்கூடாது'' என்று கூறினார்.