ரிக்சாவில் தவற விட்ட பதக்கங்கள் கொண்ட பையை மீட்ட டெல்லி போலீசார்; மாற்றுத்திறனாளி வீரர் மகிழ்ச்சி
|அந்த அடையாளம் தெரியாத வண்டி சென்ற வழியில் உள்ள நூற்றுக்கணக்கான சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்தனர்.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்ளரங்கத்தில் நடைபெறும் போட்டி தொடர் ஒன்றில் பங்கேற்பதற்காக மாற்றுத்திறனாளியான பேட்மிண்டன் வீரர் எச்.சி. ஜெகதீஷ் என்பவர் வந்துள்ளார்.
டெல்லிக்கு வந்த அவர், வழியில் மூன்று சக்கர ஸ்கூட்டர் ரிக்சாவில் (டி.எஸ்.ஆர்.) பயணித்தபோது, அவருடைய பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் பிற முக்கிய ஆவணங்கள் அடங்கிய பையை தவற விட்டுள்ளார்.
இதுபற்றி போலீசில் புகார் அளித்ததும், டெல்லி போலீசார் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். அந்த அடையாளம் தெரியாத வண்டி சென்ற வழியில் உள்ள நூற்றுக்கணக்கான சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்தனர்.
அந்த வண்டியின் பதிவெண்ணை கண்டறிந்தனர். அதன் உதவியுடன் விசாரித்ததில் வாகன உரிமையாளர் உத்தர பிரதேசத்தின் லோனி காசியாபாத் நகரில் இருப்பது தெரிய வந்தது. அவரை வரவழைத்து காணாமல் போன பையை மீட்டனர்.
இதன்பின்பு, புகார் அளித்த ஜெகதீஷிடம் பதக்கங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டன. இதனை பெற்று கொண்டதும் ஜெகதீஷ் மகிழ்ச்சியில் ஆழ்ந்து விட்டார். பின்னர், பையை மீட்டு தந்த காவலருடன் ஜெகதீஷ், அவருடைய நண்பர்கள் உள்பட அனைவரும் ஒன்றாக புகைப்படம் எடுத்து கொண்டனர்.