புத்த மதத்திற்கு மாறியவர்கள் குறித்த புகைப்படங்களை பகிர்ந்ததாக புகார் - முன்னாள் மந்திரியிடம் டெல்லி போலீசார் விசாரணை
|இந்து மதத்தில் இருந்து புத்த மதத்திற்கு மாறியவர்கள் குறித்த புகைப்படங்களை ராஜேந்திர பால் கவுதம் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
டெல்லி,
கடந்த 5-ந்தேதி நடைபெற்ற அசோக விஜயதசமி நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் இந்து மதத்தில் இருந்து புத்த மதத்திற்கு மாறினர். இந்த நிகழ்ச்சியில் டெல்லியின் சமூக நலத்துறை மந்திரியாக இருந்த ராஜேந்திர பால் கவுதம் பங்கேற்றார். மேலும் இந்த நிகழ்ச்சி குறித்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
இதற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதையடுத்து ராஜேந்திர பால் கவுதம் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். தன்னை ராஜினாமா செய்யச் சொல்லி யாரும் வற்புறுத்தவில்லை எனவும், தனது சொந்த விருப்பத்தின் பேரில் பதவியை ராஜினாமா செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்து மதத்தில் இருந்து புத்த மதத்திற்கு மாறியவர்கள் குறித்த புகைப்படங்களை பகிர்ந்த புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ராஜேந்திர பால் கவுதமிற்கு டெல்லி போலீசார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து டெல்லி பகர்கஞ்ச் காவல் நிலையத்தில் இன்று அவர் நேரில் ஆஜராகி போலீசாரிடம் விளக்கமளித்துள்ளார்.