< Back
தேசிய செய்திகள்
டெல்லி போலீசார் அதிரடி:  உ.பி. குடோனில் பதுக்கிய ரூ.1,200 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்
தேசிய செய்திகள்

டெல்லி போலீசார் அதிரடி: உ.பி. குடோனில் பதுக்கிய ரூ.1,200 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்

தினத்தந்தி
|
6 Sept 2022 9:02 PM IST

உத்தர பிரதேசத்தில் ஒரு குடோனில் சர்வதேச சந்தையில் ரூ.1,200 கோடி மதிப்பிலான போதை பொருட்களை டெல்லி போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

லக்னோ,



உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் ஒரு குடோனில் இருந்து 606 பைகள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் 312.5 கிலோ மெத்தம்பிட்டமைன் என்ற போதை பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. இதுதவிர, 10 கிலோ ஹெராயினும் கைப்பற்றப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதன் மொத்த மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.1,200 கோடி என கூறப்படுகிறது.

இந்த வழக்கில் ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் மற்றும் கந்தகார் நகரை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் 2016-ம் ஆண்டில் இருந்தே இந்தியாவில் வசித்து வருகின்றனர்.

போதை பொருள் பயன்பாடு தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். பயங்கரவாத செயலும் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு திருத்த சட்டத்தின் (உபா சட்டம்) கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு காவல் உயரதிகாரியான தலிவால் கூறியுள்ளார்.

இந்திய வரலாற்றில் மிக பெரிய அளவில் மெத்தம்பிட்டமைன் என்ற போதை பொருள் கைப்பற்றப்பட்டு உள்ளது. மேற்கு கடல் துறைமுக பகுதியில் இருந்து இந்த போதை பொருட்கள் இந்தியாவுக்கு கடத்தி கொண்டு வரப்பட்டு உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில், இரு தினங்களுக்கு முன் இந்தியாவுக்கு குடும்பத்துடன் அகதியாக மருத்துவ விசாவில் வந்த ஆப்கானிஸ்தானியர் ரூ.20 கோடி போதை பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டார்.

ஆப்கானிஸ்தானில் குடும்பத்துடன் வசித்து வந்த அகதியான அவர் போரால் பாதிக்கப்பட்டு, ஐ.நா. அமைப்பின் அகதிகளுக்கான தூதரகம் வழியே அந்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்துள்ளார்.

அவர் மருத்துவ விசாவில் இந்தியா வந்த நிலையில், தலைநகர் டெல்லியின் வசந்த்குஞ்ச் பகுதியில் வைத்து, குஜராத்தின் பயங்கரவாத ஒழிப்பு படையால் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் இருந்து ரூ.20 கோடி மதிப்பிலான 4 கிலோ ஹெராயின் என்ற போதை பொருள் கைப்பற்றப்பட்டு உள்ளது.

சர்வதேச அளவில் கும்பல் ஒன்று கடத்தலில் ஈடுபடுகிறது என கிடைத்த உளவு தகவலை தொடர்ந்து, குஜராத் போலீசாருடன் இணைந்து, டெல்லி குற்ற பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் அந்த நபர் கைது செய்யப்பட்டு உள்ளார். தொடர்ந்து, அவருடன் தொடர்புடைய கடத்தல்காரர்கள் மற்றும் கடத்தல் கும்பல் பற்றிய விசாரணை நடந்து வந்தது.

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் ஒரு குடோனில் இருந்து ரூ.1,200 கோடி மதிப்பிலான போதை பொருட்களை டெல்லி போலீசார் கைப்பற்றியது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்