பிரிஜ் பூஷண் மீதான பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது டெல்லி காவல்துறை
|பிரிஜ் பூஷண் மீதான வழக்கில் டெல்லி காவல்துறை கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி,
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தெரிவித்து, ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது 2 எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு எப்.ஐ.ஆர். போக்சோ பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், புகார் தெரிவித்த மைனர் பெண்ணின் தந்தை தனது வாக்குமூலத்தை மாற்றியதால், பிரிஜ் பூஷண் மீது போக்சோ பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய டெல்லி காவல்துறை பரிந்துரைத்துள்ளது.
அதே சமயம் பிரிஜ் பூஷண் மீதான மற்றொரு பாலியல் புகாரில் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354, 354டி, 345ஏ, மற்றும் 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி காவல்துறை தற்போது டெல்லி ரவுஸ் அவென்யூ கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிக்கை தொடர்பான பரிசீலனையை வரும் 22-ந்தேதிக்கு ஒத்திவைத்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.