மல்யுத்த வீரர்களின் 'போராட்ட அமைப்பாளர்கள்' மீது எப்ஐஆர் பதிவு செய்த டெல்லி போலீசார்
|மல்யுத்த வீரர்களின் 'போராட்ட அமைப்பாளர்கள்' மீது டெல்லி போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
புதுடெல்லி,
பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். நாடளுமன்ற திறப்பு விழாவன்று "மஹிளா மகாபஞ்சாயத்" என்ற பெயரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்த முடிவெடுத்தனர். நாடாளுமன்றம் நோக்கி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணியாக செல்ல முயற்சித்தனர்.
ஆனால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் பேரணியாக சென்றனர். அப்போது, தடையை மீறி சென்ற அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காங்கிரஸ் உள்பட முக்கிய கட்சிகள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று நடந்த போராட்டம் தொடர்பாக மல்யுத்த வீரர்களின் போராட்ட ஏற்பாட்டாளர்கள் மற்றும் பலர் மீது டெல்லி போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
இதன்படி மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் மற்றும் போராட்ட அமைப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவுகள் 147, 149, 186, 188, 332, 353, PDPP சட்டத்தின் பிரிவு 3 ஆகியவற்றின் கீழ் இவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஒரு சில மல்யுத்த வீரர்கள் இரவில் ஜந்தர் மந்தருக்கு போராட்டம் கைது தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்க வந்தனர், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்