சட்டவிரோத உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: டெல்லியில் பெண் டாக்டர் உட்பட 7 பேர் கைது
|டெல்லி தனியார் மருத்துவமனையில் சட்டவிரோத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
புதுடெல்லி,
டெல்லியில் முறைகேடாக உடல் உறுப்புகள் பெற்று ஆபரேஷன் நடந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ரகசிய தகவலின் பேரில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார், கடந்த 2 மாத காலம் ரகசிய புலன் விசாரணை நடத்தியதில் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. வங்காள தேசத்தில் இருந்து ஏழை எளிய மக்களிடம் முறைகேடாக உடல் உறுப்புகளை தானம் பெற்றும், விலைக்கு வாங்கியும் ரகசிய ஆபரேஷன்கள் நடந்துள்ளன. ஆபரேஷன் செய்து கொண்ட நபர்களும் பெரும்பாலும் வங்காள தேசத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். ஆனால் ஆபரேஷன் மட்டும் டெல்லியில் நடந்துள்ளது.
போலியாக ஏதாவது ஒரு அறுவை சிகிச்சை என்று சான்றிதழ் தயாரிக்கப்பட்டு முறைகேடாக ஆபரேஷன்கள் நடந்துள்ளன. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான பெண் டாக்டர் ஒருவர் இதில் முக்கிய பங்காற்றி உள்ளார். தென்கிழக்கு டெல்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைகள் நடந்துள்ளன. நொய்டாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் இந்த டாக்டர், இங்கு வருகை ஆலோசகராக வந்து சிகிச்சை செய்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 2021-2023 ஆண்டு காலத்தில் பல ஆபரேஷன்கள் நடந்துள்ளன.
இது தொடர்பாக அந்த பெண் டாக்டர், அவரது உதவியாளர் மற்றும் ஒரு இந்தியர் மேலும் 3 வங்காள தேச நபர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கடந்த 2 வார காலத்தில் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக துப்புத்துலக்கி கைது செய்யப்பட்டனர்.