டெல்லியில் தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல்: 6 பேர் கைது
|டெல்லியில் 2000 தோட்டாக்கள் மற்றும் வெடிமருந்துகளை எடுத்துச்சென்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுடெல்லி,
நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுதந்திர தின விழா நடைபெறும் செங்கோட்டை பகுதியில் மட்டும் சுமார் 10,000 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுதந்திர தினத்தை சீர்குலைக்க பயங்கரவாதிகள் முயற்சிக்கலாம் என உளவுத்துறை எச்சரித்திருந்தது. இதனையடுத்து பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிழக்கு டெல்லி போலீசார், ஆனந்த் விஹார் பகுதியில் நடத்திய சோதனையில் 2000 தோட்டாக்கள், வெடிமருந்துகள் அடங்கிய பைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 6 பேரை கைது செய்த போலீசார், வெடிமருந்து மற்றும் தோட்டாக்களை கைப்பற்றினர்.
கைதானவர்களின் பின்னணி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இன்னும் 3 நாட்களில் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.