கடன் செயலிகள் மூலம் சீனாவுக்கு அனுப்பப்பட்ட பயனர்களின் தரவுகள்! டெல்லி போலீசாரின் அதிரடி சோதனையில் வெளியான பகீர் தகவல்
|கடன் செயலிகள் மூலம் கடன் வழங்குவதாகவும், நிர்வாண படங்களை பதிவேற்றி மிரட்டி பணம் பறிப்பதாகவும் புகார்கள் குவிந்தன.
புதுடெல்லி,
டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவான, 'உளவுத்துறை இணைவு மற்றும் மூலோபாய செயல்பாடுகள்(ஐ எப் எஸ் ஓ) சீனாவை தளமாகக் கொண்ட இணையதள சர்வர்களுக்கு, பயனர் தரவுத்தளங்களை வழங்கிய பணம் பறிக்கும் கும்பலை திட்டமிட்டு மடக்கி பிடித்தனர்.
முன்னதாக, டெல்லி காவல்துறையின் சைபர் செல் பிரிவுக்கு, செல்போன் செயலிகளைப் பயன்படுத்தி உடனடி கடன் அளிக்கும் ஆப்கள், அவற்றின் பின்புலத்தில் இருக்கும் நபர்கள், பயனர்களிடமிருந்து மிரட்டி பணம் பறிப்பது தொடர்பான பல புகார்கள் வந்தன.
மேலும், மார்பிங் செய்யப்பட்ட பயனர்களின் நிர்வாணப் படங்களைப் பயன்படுத்தி பணம் பறிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். பல மக்கள் இதனால் தற்கொலை செய்து கொள்ளும் பல சம்பவங்கள் நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் பதிவாகியுள்ளன.
கடன் செயலிகள் மூலம் அதிக வட்டிக்கு கடன் வழங்குவதாகவும், கடனை பயனர்கள் செலுத்திய பிறகும் அவர்களது மார்பிங் செய்யப்பட்ட நிர்வாண படங்களை பதிவேற்றி மிரட்டி பணம் பறிப்பதாகவும் நூற்றுக்கணக்கான புகார்கள் குவிந்தன.
மேற்கண்ட புகார்களை ஆய்வு செய்ததில், இதுபோன்ற 100க்கும் மேற்பட்ட ஆப்கள், கடன் மற்றும் மிரட்டி பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டது. ரூ.5,000 முதல் 10,000 வரை சிறிய கடன் தேவைப்படும் குடிமக்களை அவர்கள் குறிவைத்தனர். அப்படி சேகரிக்கப்பட்ட பணம் ஹவாலா மற்றும் கிரிப்டோகரன்சிகள் மூலம் சீனாவிற்கு அனுப்பப்பட்டது.
இதனையடுத்து, டெல்லி, அரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் இரண்டு மாதங்களாக போலீசார் அதிரடி சோதனைகளை நடத்தினர். டெல்லி காவல்துறை விரிவான தொழில்நுட்ப பகுப்பாய்வை மேற்கொண்டது. இது கடன் மற்றும் மிரட்டி பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்ட வழக்கை முறியடிக்க உதவியது.
இந்த வழக்கில் 6 சீன நாட்டினர் உட்பட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.சோதனையில், 9 மடிக்கணினிகள், 25 ஹார்ட் டிஸ்க்குகள், 51 மொபைல் போன்கள், 19 டெபிட் கார்டுகள் ஆகியவற்றை போலீசார் மீட்டனர்.
எல்லா செயலிகளும் பயனரிடமிருந்து சில அனுமதிகளை அவர்கள் மொபைலில் இருந்து பெறுவது கண்டறியப்பட்டது. அணுகல் அனுமதிகளைப் பெற்ற பிறகு, பயனரின் தொடர்புகள், எஸ்.எம்.எஸ்கள், செய்திகள் மற்றும் படங்கள் ஆகியவை சீனா மற்றும் ஹாங்காங்கில் உள்ள சர்வர்களில் பதிவேற்றப்பட்டன. அதன்பின், பணம் ஹவாலா மற்றும் கிரிப்டோகரன்சிகள் மூலம் சீனாவிற்கு அனுப்பப்படுகிறது.
இந்த 100க்கும் மேற்பட்ட செயலிகள், ஏ.டபில்யூ.எஸ் இணைய சேவை தளங்கள் மற்றும் அலிபாபா சேவையகங்களிலிருந்து போலியாக இந்தியாவில் ஹோஸ்ட் செயல்பட்டன. போலீஸ் சோதனையை தொடர்ந்து, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளுக்கு மோசடி கும்பல் தங்கள் கால்சென்டர்களை மாற்றுவது தெரியவந்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய மொபைல் போன் செயலிகளின் பெயர்களை போலீசார் பட்டியலிட்டனர் அவை; ரெய்ஸ் கேஷ் ஆப், பிபி மனி ஆப், ருபீஸ் மஸ்டர் ஆப், கேஷ் ரே ஆப், மொபி பாக்கெட் ஆப் ஆகிய பல செயலிகள் அடங்கும்.
ஏசிபி ராமன் லம்பா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அவதேஷ், அருண் தியாகி, எஸ்.ஐ மஞ்சீத், சுஷில், சுனில் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. சீன கும்பலை பிடிக்க சிறப்பாக செயல்பட்ட அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளன.