< Back
தேசிய செய்திகள்
டெல்லி:  கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சையால் சிறுமி கோமாவில் இருந்து எழுந்த அதிசயம்
தேசிய செய்திகள்

டெல்லி: கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சையால் சிறுமி கோமாவில் இருந்து எழுந்த அதிசயம்

தினத்தந்தி
|
16 May 2024 12:21 PM GMT

கோமா நிலைக்கு சென்ற சிறுமி காப்பாற்றப்பட வேண்டும் என்றால் உறுப்பு மாற்று சிகிச்சை தேவை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

புதுடெல்லி,

டெல்லியில் வசித்து வரும் ராதா (வயது 13) என்ற சிறுமிக்கு சிறுவயதில் இருந்தே உடலில் தாமிரச்சத்து சேர தொடங்கியது. இதனால், 6 வயதில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவருக்கு வில்சன் என்ற மரபணு வியாதி இருந்தது கண்டறியப்பட்டது.

சிறுமியின் கல்லீரலில் பாதிப்பு காணப்பட்டது. இதனால், வயிறு வீங்கியது. கால்களிலும் வீக்கம் ஏற்பட்டது. இதுபற்றி சிறுமியை பரிசோதித்ததில், சிறுமிக்கு ஹெபடைட்டிஸ் ஏ என்ற வைரசின் பாதிப்பு ஏற்பட்டதும் தெரிய வந்தது. இதனால், சிறுமியின் நிலைமை மோசமடைந்தது. டாக்டர்கள் போராடி ரத்த கசிவை கட்டுப்படுத்தினர்.

ஆனால், சிறுமிக்கு கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டது. இதனால், அவருடைய உடல் போராட்ட களம் போன்று மாறியது. மஞ்சள் காமாலை நோயும் சேர்ந்து கொண்டு அவரை முற்றிலும் சாய்த்தது. இதனால், சுயநினைவின்றி செல்லும் நிலைக்கு சிறுமி ஆளானார். அவரை காப்பாற்ற டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று போராடியது.

இதன் முடிவில், சிறுமி காப்பாற்றப்பட வேண்டும் என்றால் உறுப்பு மாற்று சிகிச்சை தேவை என மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுமி கோமா நிலைக்கு சென்றார். மகளின் மீது அதிக அன்பு கொண்டிருந்த தாயார், இதற்கு ஒப்பு கொண்டார். அவரே கல்லீரல் உறுப்பு தானம் கொடுக்க முன்வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து, சிறுமிக்கு 12 மணிநேரம் கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சை நடந்தது. அதன்பின் 2-வது நாளில் ராதா கண் திறந்து பார்த்துள்ளார். அவருடைய தாயார் மகிழ்ச்சியில் ஆழ்ந்து போனார்.

இதனால், ராதா குணமடைந்து உடல்நலம் தேறினார். 6 வயதில் இருந்து கல்லீரல் பாதிப்பால் பாதிக்கப்பட்டு வந்த சிறுமி அவருடைய 13-வது வயதில் நோய் முற்றியதில் கோமா நிலைக்கு சென்றுள்ளார். எனினும், இந்த சிகிச்சைக்கு பின்னர் அவர் குணமடைந்து இருக்கிறார்.

அவர் தன்னுடைய சகோதரர்களுடன் வீட்டுக்கு திரும்பியுள்ளார். கோடை கால விடுமுறை முடிந்ததும் பள்ளிக்கு செல்லவும் தயாராக உள்ளார்.

மேலும் செய்திகள்