< Back
தேசிய செய்திகள்
டெல்லி மேயர் தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிப்பு
தேசிய செய்திகள்

டெல்லி மேயர் தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
18 Feb 2023 5:50 PM IST

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசு அளித்த பரிந்துரைக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுடெல்லி,

250 இடங்களை கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த மாதம் 4-ந்தேதி தேர்தல் நடந்தது. இது 3 மாநகராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்ட பின்னர் நடந்த முதல் தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் 134 இடங்களை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பா.ஜ.க.வோ 104 இடங்களில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்கள் கிடைத்தன.

இதையடுத்து கவுன்சிலர்கள் பதவியேற்புக்குப் பின் மேயர் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. மேயர், துணை மேயர் பதவிகளுக்கு ஆம் ஆத்மி மற்றும் பாஜக இரு தரப்பும் வேட்பாளர்களை அறிவித்தது. ஆனால், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் கவர்னரால் நியமிக்கப்பட்ட நியமன உறுப்பினர்கள் விவகாரம், மாமன்றத்தில் புயலை கிளப்பியது.

கவர்னரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மேயர் தேர்தல், துணை மேயர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளதா என்பது தொடர்பாக ஏற்பட்ட மோதல் காரணமாக மேயர் தேர்தல் தொடர்ந்து 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே டெல்லி மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது என உத்தரவிட்டனர். இந்த உத்தரவை தொடர்ந்து டெல்லி மேயர் தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 22-ந்தேதி மேயர் தேர்தல் நடத்தும்படி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசு அளித்த பரிந்துரைக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி வரும் 22-ந்தேதி டெல்லி மேயர், துணை மேயர் மற்றும் 6 நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

மேலும் செய்திகள்