< Back
தேசிய செய்திகள்
டெல்லி மேயர், துணை மேயர் தேர்தல் தேதி அறிவிப்பு
தேசிய செய்திகள்

டெல்லி மேயர், துணை மேயர் தேர்தல் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
10 April 2024 3:13 PM IST

டெல்லியில் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் வருகிற 26-ந்தேதி காலை நடைபெறும் என டெல்லி மாநகராட்சியின் செயலாளர் அலுவலகம் இன்று அறிவித்து உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி டெல்லி மாநகராட்சியின் செயலாளர் அலுவலகம் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையின்படி, டெல்லி மாநகராட்சியின் வருடாந்திர ஏப்ரல் மாத கூட்டம் வருகிற 26-ந்தேதி (வெள்ளி கிழமை) காலை 11 மணியளவில் ஜவகர்லால் நேரு மார்க் பகுதியில், டாக்டர் எஸ்.பி. முகர்ஜி சிவிக் மையத்தின் 4-வது தளத்தில் உள்ள அருணா ஆசப் அலி சபாகர் பிளாக்கில் நடைபெறும்.

இதே கூட்டத்தில், மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தலும் நடைபெறும் என அந்த அறிவிப்பு தெரிவிக்கின்றது. டெல்லி மாநகராட்சியை எடுத்து கொண்டால், ஒவ்வொரு நிதியாண்டும் மேயர் பதவி சுழற்சி முறையில் நடைபெறும்.

இதன்படி, 5 ஒற்றையாண்டு காலகட்டத்தில், முதல் ஆண்டில் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். 2-வது ஆண்டு பொது பிரிவினருக்கும், 3-வது ஆண்டு ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் வழங்கப்படும். மீதமுள்ள 2 ஆண்டுகள் பொது பிரிவினருக்கு மீண்டும் வழங்கப்படும். இதன்படி, ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் டெல்லிக்கு புதிய மேயர் கிடைப்பார்கள்.

மொத்தமுள்ள 250 வார்டுகளில், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந்தேதி நடந்த டெல்லி மாநகராட்சி தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி, 134 இடங்களை வென்றது. பா.ஜ.க.வுக்கு 104 வார்டுகள் கிடைத்தன. காங்கிரஸ் கட்சி 9 இடங்களையும், சுயேச்சைகள் 3 இடங்களையும் கைப்பற்றின.

எனினும், நியமன உறுப்பினர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது தொடர்பாக ஏற்பட்ட குழப்பத்தில் மேயர் தேர்தல் 3 முறை தள்ளி வைக்கப்பட்டது. இதில், ஒரு கூட்டத்தில் ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க. என இரண்டு கட்சிகளும் மோதி கொண்டன. இதற்காக ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபராய், சுப்ரீம் கோர்ட்டுக்கும் சென்றார். இதன்பின்னர், 4-வது முயற்சியில் ஓபராய் டெல்லி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன்படி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் பெண் கவுன்சிலர் ஷெல்லி ஒபராய், பா.ஜ.க. வேட்பாளரை 34 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று மேயர் ஆனார். துணை மேயராக ஆம் ஆத்மி கட்சியின் ஆலே முகமது இக்பால் தேர்வு பெற்றார்.

கடைசி நேரத்தில் பா.ஜ.க. வேட்பாளர்கள் வாபஸ் வாங்கினர். இதனால் ஷெல்லி ஓபராய் மீண்டும் மேயராக போட்டியின்றி தேர்வு பெற்றார். அதேபோல துணை மேயர் பதவியும் போட்டியின்றி கிடைத்தது. வெற்றி பெற்றவர்களுக்கு முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த சூழலில், நடப்பு ஆண்டில் டெல்லி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடைபெற இருக்கிறது. கெஜ்ரிவால், சிறைக்கு சென்றுள்ள சூழலில் நடைபெற உள்ள இந்த தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்