டெல்லியில் இரு சக்கர வாகனத்தை தேசியக்கொடியால் சுத்தம் செய்தவர் கைது...!
|டெல்லியில் இரு சக்கர வாகனத்தை தேசியக் கொடியைப் பயன்படுத்தி சுத்தம் செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
புதுடெல்லி,
வடகிழக்கு டெல்லியின் பஜன்புரா பகுதியில் இரு சக்கர வாகனத்தை தேசியக்கொடியைப் பயன்படுத்தி சுத்தம் செய்ததாக 52 வயது நபர் ஒருவரை 1971 தேசிய மரியாதையை அவமதிப்பது தடுப்புச் சட்டம் பிரிவு 2 இன் கீழ் வழக்குப்பதிவு செய்து டெல்லி போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரது இரு சக்கர வாகனம் மற்றும் கொடியை பறிமுதல் செய்தனர். சம்பந்தப்பட்ட நபர் டெல்லியின் வடக்கு கோண்டா பகுதியில் வசிப்பவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரு சக்கர வாகனத்தை தேசியக்கொடியால் சுத்தம் செய்ததை அப்பகுதியில் உள்ள ஒருவர் மாடியில் இருந்து வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். அந்த விடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், அந்த நபர் தனது வெள்ளை நிற இரு சக்கர வாகனத்தை தேசியக்கொடியை மடித்து சுத்தம் செய்து தூசி தூவினார். பின்னர் சுத்தம் செய்து விட்டு வீட்டிற்கு சென்றார்.