பல்கலைக்கழக ஆவணங்களை ஆய்வு செய்வதற்கு எதிரான மனு - டெல்லி ஐகோர்ட்டில் அடுத்த ஆண்டு விசாரணை
|பிரதமர் மோடி பி.ஏ. தேர்ச்சி பெற்ற விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக ஆவணங்களை ஆய்வு செய்வதற்கு எதிரான மனு டெல்லி ஐகோர்ட்டில் அடுத்த ஆண்டு விசாரணைக்கு வருகிறது.
புதுடெல்லி,
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், நீரஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவை 2016-ம் ஆண்டு விசாரித்த மத்திய தகவல் ஆணையம், கடந்த 1978-ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ. தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களின் ஆவணங்களையும் ஆய்வு செய்ய அனுமதிக்குமாறு டெல்லி பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டது.
அதே 1978-ம் ஆண்டில்தான் அந்த பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பி.ஏ. தேர்ச்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி பல்கலைக்கழகம் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்பேரில், மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு 2017-ம் ஆண்டு ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
இந்தநிலையில், நிலுவையில் உள்ள டெல்லி பல்கலைக்கழகத்தின் மனு, இந்த வாரம் விசாரணைக்கு வந்தது. ஆனால், பல்கலைக்கழகம் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, அடுத்தகட்ட விசாரணையை அடுத்த ஆண்டு மே 3-ந் தேதிக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மா தள்ளி வைத்தார்.