மல்யுத்த அணித் தேர்வு சலுகைக்கு எதிரான மனு தள்ளுபடி - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
|பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத்துக்கு அளிக்கப்பட்ட மல்யுத்த அணித் தேர்வு சலுகைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி,
சீனாவில் செப்டம்பர் 23-ந் தேதி தொடங்கும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய மல்யுத்த அணி தேர்வு டெல்லியில் நேற்று தொடங்கியது. இன்றும் இந்த தேர்வு நடைபெறுகிறது. இந்த தகுதி தேர்வு போட்டியில் இருந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா, காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் பஜ்ரங் பூனியா ஆகியோருக்கு விலக்கு அளித்த இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடைக்கால கமிட்டி இருவரும் இந்திய மல்யுத்த அணியில் நேரடியாக இடம் பெறுவார்கள் என்று அறிவித்து இருந்தது.
இந்த முடிவை எதிர்த்து இளையோர் ஆசிய சாம்பியன் சுஜீத் கல்கால், ஜூனியர் உலக சாம்பியன் அந்திம் பன்ஹால் ஆகியோர் டெல்லி ஐகோர்ட்டில் கூட்டாக வழக்கு தொடர்ந்தனர். அதில், 'பஜ்ரங், வினேஷ்க்கு அணி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது நியாயமற்றது. அந்த சலுகையை ரத்து செய்வதுடன் எல்லா வீரர், வீராங்கனைகளுக்கும் நியாயமான முறையில் தகுதி தேர்வு போட்டியை நடத்த உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத், பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் ஆகியோருக்கு அணி தேர்வில் அளிக்கப்பட்ட சலுகையை எதிர்த்து சுஜீத் கல்கால், அந்திம் பன்ஹால் ஆகியோர் தாக்கல் செய்து இருந்த எழுத்துபூர்வமான மனுவை நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.