திருமணம் ஆகாத இளம்பெண் 23 வார கர்ப்பம்; கருக்கலைப்பு செய்ய அனுமதி கோரிய மனு தலைமை நீதிபதி முன்னிலையில் விசாரணை
|கர்ப்பமாகி 23 வாரங்கள் கடந்த நிலையில், திருமணமாகாத பெண் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, டெல்லி ஐகோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.
புதுடெல்லி,
திருமணமாகாமல் கர்ப்பிணியாக உள்ள 20 வயது இளம்பெண் ஒருவர் தற்போது, கர்ப்பமாகி 23 வாரங்கள் கடந்த நிலையில், அவர் வயிற்றில் வளரும் கருவை கலைக்க அனுமதிக்க முடியாது என டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா தலைமையிலான அமர்வு, திருமணமாகாத பெண் ஒருவர் தாக்கல் செய்த கருக்கலைப்பு மனுவை இன்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-
அந்த பெண்ணை பாதுகாப்பாக எங்காவது ஓர் இடத்தில் வைத்திருப்பதை உறுதி செய்வோம், கர்ப்பமான அந்த பெண் குழந்தையை பிரசவித்த பின், எங்கு வேண்டுமானாலும் விட்டுப் போகலாம். குழந்தையில்லாத பலர், ஓர் குழந்தையை தத்தெடுப்பதற்காக காத்திருக்கின்றனர்.
ஓர் பெண்ணின் கர்ப்ப காலமான 36 வாரங்களில், கிட்டத்தட்ட 24 வாரங்கள் கர்ப்பம் முடிந்துவிட்டன. இந்த நிலையில், அந்த குழந்தையை கொல்ல நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இது கிட்டத்தட்ட கருவை கொல்வதற்குச் சமம். இதற்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.
குழந்தையை வளர்க்கும்படி நாங்கள் அவரை (மனுதாரர்) வற்புறுத்தவில்லை. அவர் ஒரு நல்ல மருத்துவமனைக்குச் செல்வதை உறுதி செய்வோம். மேலும், அவர் இருக்கும் இடம் தெரியாத வகையிலும் பார்த்துக் கொள்ளப்படும். அவர் குழந்தையை பிரசவித்த பின், எங்கு வேண்டுமானாலும் விட்டுப் போகலாம் என்று நீதிபதிகள் கூறினர்.
மேலும், திருமணமாகாத பெண் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, டெல்லி ஐகோர்ட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.