டெல்லி: 10 வயது பள்ளி மாணவனின் புத்தக பையில் கைத்துப்பாக்கி; ஆசிரியர்கள் அதிர்ச்சி
|டெல்லியில் மாணவனின் புத்தகங்கள் வைக்கும் பையில் இருந்த கைத்துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
புதுடெல்லி,
டெல்லியின் நஜாப்கார் பகுதியை சேர்ந்த, பள்ளியில் படித்து வரும் 10 வயது மாணவன் ஒருவன் பள்ளிக்கு செல்லும்போது, உடன் துப்பாக்கி ஒன்றை பையில் எடுத்து கொண்டு சென்றிருக்கிறான்.
இதுபற்றி பள்ளியிலுள்ள ஆசிரியர்கள், சக மாணவர்களுக்கு விசயம் தெரிந்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து அந்த மாணவனின் பையில் சோதனை செய்தனர்.
இதில், கைத்துப்பாக்கி ஒன்று புத்தகங்கள் வைக்கும் பையில் இருந்துள்ளது. உடனடியாக அதனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த மாணவனின் தந்தையின் பெயரில் கைத்துப்பாக்கிக்கு உரிமம் வழங்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அவர் சில மாதங்களுக்கு முன் உயிரிழந்து விட்டார்.
இதனை தொடர்ந்து, அந்த துப்பாக்கியின் உரிமம் ரத்து செய்யப்படுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த விவகாரம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.