பழைய கலால் கொள்கை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்தது டெல்லி அரசு
|பழைய கலால் கொள்கை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி அரசின் மதுபான விற்பனை கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. புதிய மதுபான கொள்கை ரத்து செய்யப்பட்டு டெல்லியில் மீண்டும் பழைய மது பான கொள்கை அமலுக்கு வந்தது.
டெல்லியின் கலால் கொள்கை 2021-22 செயல்படுத்துவதில் முறைகேடுகள் நடந்ததாக டெல்லி துணைநிலை கவர்னர் சிபிஐ விசாரணை கோரியிருந்தார். இது தொடர்பாக டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பழைய கலால் கொள்கை 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. புதிய கலால் கொள்கையை அதிகாரிகள் தயாரிக்காததால், பழைய கொள்கையே மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தலைநகர் டெல்லியில் 570 சில்லறை மதுபானக் கடைகள் மற்றும் 950 க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் கிளப்புகள் மதுவை வழங்குவதற்கான உரிமத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.