அவசரகால திட்டம் மூலமாக மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்த டெல்லி கவர்னர்
|அவசரகால திட்டம் மூலமாக மழைநீரை வெளியேற்ற டெல்லி கவர்னர் நடவடிக்கை எடுத்தார்.
புதுடெல்லி,
டெல்லியில் ஜி-20 நாட்டு பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, நேற்று முன்தினம் மாலை, விருந்து அளித்தபோது மழை கொட்டத் தொடங்கியது. மாநாடு நடந்த பாரத் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது. இக்காட்சி வீடியோவாக வெளியானது.
அதே சமயத்தில், மழை பெய்யத் தொடங்கியவுடன், கவர்னர் வி.கே.சக்சேனா, மழைநேர அவசரகால திட்டத்தை முடுக்கி விட்டது தெரிய வந்துள்ளது.
பாரத் மண்டபத்துக்கு அதிகாரிகளை அனுப்பி வைத்த அவர், மோட்டார் மூலம் மழை நீரை வெளியேற்ற வைத்தார். அதற்கு முன்னும், பின்னும் இருந்த நிலைமையை படம் பிடித்து கவர்னருக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
அதுபோல், நேற்று ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு உலக தலைவர்கள் மரியாதை செலுத்த வருவதை அறிந்து அங்கும் கவர்னர் கவனம் செலுத்தினார். ஒவ்வொரு பிரதிநிதி வருவதற்கு இடைப்பட்ட நேரத்தில், தரையை துடைப்பான் கொண்டு துடைத்து, தண்ணீரை அப்புறப்படுத்த வைத்தார்.
டெல்லியில், மழைநீர் தேங்கிய இடங்களில் 15 நிமிடங்களில் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சாலையில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
போலீஸ் கமிஷனர் மற்றும் அதிகாரிகளுடன் கவர்னர் தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணிகளை முடுக்கி விட்டார்.