டெல்லி பல்கலைக்கழக கல்லூரிகளுக்கான பட்ஜெட்டின் ஒரு பகுதியாக ரூ.100 கோடியை விடுவித்தது டெல்லி அரசு
|முழு நிதியுதவி பெறும் கல்லூரிகளுக்கு பட்ஜெட் நிதியின் முதல் காலாண்டை டெல்லி அரசு இன்று வழங்கியுள்ளது.
புதுடெல்லி,
முழு நிதியுதவி பெறும் கல்லூரிகளுக்கு பட்ஜெட் நிதியின் முதல் காலாண்டை டெல்லி அரசு இன்று வழங்கியுள்ளதாக டெல்லி கல்வி மந்திரி அதிஷி தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், டெல்லி அரசு எப்போதுமே கல்வித் துறைக்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும், அதற்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்து வருவதாகவும் கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
"டெல்லி அரசின் முழு நிதியுதவி பெறும் 12 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளுக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் முதல் காலாண்டு நிதி ரூ.100 கோடி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. எங்கள் அரசு எப்போதுமே கல்வித் துறைக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. மேலும் சட்டமன்ற பட்ஜெட்களின் போது கல்வித் துறைக்கு அதிக அளவு நிதி ஒதுக்கப்படுகிறது" என்று கூறினார்.
டெல்லி அரசின் கூற்றுப்படி, முழு நிதியுதவி பெறும் கல்லூரிகளுக்கு 2022-23 சட்டமன்ற பட்ஜெட்டின் போது ரூ.361 கோடியும், 2021-22 ல் ரூ.308 கோடியும், 2020-21 ல் ரூ.265 கோடியும், 2019-20 ல் ரூ.235 கோடியும், 2018-19 ல் ரூ.213 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.