டெல்லி வெள்ள பெருக்கு; ரூ.1 கோடி மதிப்பிலான எருது மீட்பு
|டெல்லியில் ரூ.1 கோடி மதிப்பிலான எருது ஒன்றை தேசிய பேரிடர் மீட்பு படையினர் வெள்ளப்பெருக்கில் இருந்து மீட்டு உள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையை அடுத்து, யமுனை ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக அபாய அளவை கடந்து நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.
இதனை தொடர்ந்து, வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களை மீட்கும் பணியில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், நொய்டா ஆற்றங்கரை பகுதிகளில் 550 ஹெக்டேர் வரையிலான நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புலம்பெயர்ந்து சென்று உள்ளனர். 8 கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
கால்நடைகள், நாய்கள், முயல்கள், வாத்துகள், சேவல்கள் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகள் மீட்கப்பட்டு உள்ளன.
45 ஆண்டுகளில் இல்லாத வகையில், யமுனை ஆற்றில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், அபாய அளவை விட 2 மீட்டர் உயரம் என்ற அளவில் 207.68 மீட்டராக உயர்ந்து உள்ளது.
யமுனை ஆற்றின் தடுப்பணையில் இருந்து 5 கதவுகள் திறக்கும் பணிகள் நடந்து வருகின்றன என டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இந்த நிலையில், 2 எருமைகள் மற்றும் விலை மதிப்புமிக்க ஒரு எருது ஆகியவற்றை தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் மீட்டு உள்ளனர்.
அந்த மீட்கப்பட்ட எருது, பி.எம்.டபிள்யூ. எக்ஸ்5 காரின் மதிப்பை விட அதிகம். ஏறக்குறைய ரூ.1 கோடி மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. பிரீத்தம் என்ற இந்தியாவின் நம்பர் ஒன் எருது வகையை சேர்ந்த காளை ஒன்றை அவர்கள் மீட்டு உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.