கெஜ்ரிவாலின் மருத்துவ ஆவணங்களை மனைவி பார்வையிடலாம் - டெல்லி கோர்ட்டு அனுமதி
|தனது மனைவி சுனிதா பார்வையிட அனுமதி கோரி கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி,
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து வருகிறார். அவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள டாக்டர்களின் பரிந்துரைப்படி அவருக்கு மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. உணவு கட்டுப்பாடும் பின்பற்றப்படுகிறது.
இந்நிலையில், தனது மருத்துவ ஆவணங்களை தன் மனைவி சுனிதா பார்வையிட அனுமதி கோரி கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி விசாரணை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதை விசாரித்த நீதிபதி காவேரி பவேஜா, கெஜ்ரிவாலின் மருத்துவ ஆவணங்களை சுனிதா பார்வையிட அனுமதி அளித்தார். அந்த ஆவணங்களை சுனிதாவிடம் காண்பிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வேறு டாக்டர்களிடம் சுதந்திரமாக ஆலோசிக்கவும் சுனிதாவுக்கு அனுமதி அளித்தார். இருப்பினும், சிறையில் டாக்டர்களுடனான ஆலோசனையின்போது தனக்கு துணையாக இருக்க சுனிதாவை அனுமதிக்குமாறு கெஜ்ரிவால் விடுத்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.