பண மோசடி வழக்கில் 'சூப்பர்டெக்' நிறுவன தலைவருக்கு அமலாக்கத்துறை காவல்: டெல்லி கோர்ட்டு உத்தரவு
|அடுத்த மாதம் 10-ந்தேதி வரை ராம்கிஷோர் அரோராவை அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லி, அரியானா, உத்தரபிரதேசத்தில் செயல்பட்டுவரும் ரியல் எஸ்டேட் பெரும் நிறுவனம் 'சூப்பர்டெக்'. இந்த நிறுவனம் தங்களிடம் வீடு வாங்கிய 670 பேரிடம் ரூ.164 கோடி மோசடி செய்ததாக 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும் இந்நிறுவனம், வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களிடம் பெற்ற கடன் தொகையை திருப்பிச் செலுத்தாமல் ஆயிரத்து 500 கோடி ரூபாய் வராக்கடனாக ஆகியுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 'சூப்பர்டெக்' நிறுவன தலைவர் ராம்கிஷோர் அரோரா நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
அவரை 14 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி செசன்ஸ் கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.
அதை விசாரித்த நீதிபதி, அடுத்த மாதம் 10-ந்தேதி வரை ராம்கிஷோர் அரோராவை அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதித்து நேற்று உத்தரவிட்டார். டெல்லி அருகே நொய்டாவில் 'சூப்பர்டெக்' நிறுவனத்தின் இரட்டை அடுக்குமாடி கோபுரங்கள், விதிகளை மீறி கட்டப்பட்டதாக கூறி கடந்த ஆண்டு ஆகஸ்டில் இடித்துத்தள்ளப்பட்டன. அதுமுதலே இந்த நிறுவனம் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.