பாலியல் புகார் வழக்கில் பிரிஜ் பூஷனுக்கு ஜாமீன் - டெல்லி கோர்ட்டு உத்தரவு
|பிரிஜ் பூஷனுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி,
பாலியல் புகார் வழக்கில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி காவல்துறை கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பான வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக டெல்லி காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ஆய்வு செய்த நீதிமன்றம், ஜூலை 18-ந்தேதி பிரிஜ் பூஷனை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இதன்படி பிரிஜ் பூஷன் நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜரான போது அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.
அதே சமயம் பிரிஜ் பூஷன் சிங் அதிகாரமிக்க நபர் என்பதால், அவர் ஜாமீனில் இருக்கும் போது சாட்சிகளை கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என டெல்லி காவல்துறை தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது பிரிஜ் பூஷனுக்கு வழக்கமான ஜாமீன் வழங்கி டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.