டெல்லி மாநகராட்சி தேர்தல்; வாக்காளர் பட்டியலில் பலரது பெயர் இல்லை: சிசோடியா பரபரப்பு குற்றச்சாட்டு
|தூய்மையான டெல்லி, பள்ளி, மருத்துவமனைகள் உள்ளிட்ட பல விசயங்களை வாக்களிக்கும்போது, 1.5 கோடி வாக்காளர்கள் நினைவில் கொள்ள வேண்டுமென டெல்லி துணை முதல்-மந்திரி சிசோடியா கூறினார்.
புதுடெல்லி,
டெல்லியில் மாநகராட்சி தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தி உள்ளன. கடந்த தேர்தலில் பா.ஜ.க. மாநகராட்சியை கைப்பற்றியிருந்தது.
மொத்தம் உள்ள 250 வார்டுகளுக்கான தேர்தலுக்காக 13 ஆயிரத்து 638 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் 1.45 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்களாக உள்ளனர். 1,349 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தேர்தலை முன்னிட்டு டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா வாக்காளர்களிடம் வேண்டுகோளாக இன்று கூறும்போது, 1.5 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கும்போது, தூய்மையான டெல்லி, சுகாதார விவகாரங்கள், நிலக்கழிவுகள், ஊழல், வாகனம் நிறுத்துவதில் குளறுபடி, தெருவில் சுற்றி திரியும் கால்நடைகள் மற்றும் பள்ளி, மருத்துவமனைகள் உள்ளிட்ட பல விசயங்களையும் நினைவில் கொள்ள வேண்டும் என பேசினார்.
இந்த தேர்தலில், மதியம் 2 மணிவரையில் மந்தகதியில் வாக்கு பதிவு நடந்துள்ளது என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இதன்படி, 39 சதவீத வாக்குகளே பதிவாகி இருந்தன.
இந்த நிலையில், சிசோடியா கூறும்போது, டெல்லி மாநகராட்சி தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பலரது பெயர் இல்லை. வாக்கு மையத்திற்கு வெளியே உள்ள மக்களின் பெயர்கள் பட்டியலில் இல்லை என அவர்கள் கூறுகின்றனர். தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாததற்காக மக்கள் கோபத்தில் உள்ளனர்.
ஏதோ சதி திட்டம் நடந்துள்ளது. தேர்தல் ஆணையத்திடம் சென்று சதி திட்டம் பற்றி புகார் அளிக்க போகிறேன் என டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா கூறியுள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.