சிறையில் மந்திரியுடன் சந்திப்பு: டெல்லியில் குடிநீர் வினியோகத்தை மேம்படுத்த கெஜ்ரிவால் அறிவுறுத்தல்
|டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலை, அவரது மனைவி மற்றும் மாநில மந்திரி ஆகியோர் நேற்று திகார் சிறையில் சந்தித்து பேசினர்.
புதுடெல்லி,
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முதல்-மந்திரி கெஜ்ரிவால், திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
சிறையில் அவரை நேற்று அவரது மனைவி சுனிதா மற்றும் டெல்லி கல்வித்துறை மந்திரி அதிஷி ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு முதலில் அனுமதி மறுத்த சிைற நிர்வாகம், பின்னர் அனுமதி அளித்து இருந்தது.
திகார் சிறையில் இருந்து கொண்டே முதல்-மந்திரிக்கான பணிகளையும் கெஜ்ரிவால் மேற்கொண்டு வருவதால், இந்த சந்திப்பின்போது அரசு துறைகளின் செயல்பாடுகளை மந்திரி அதிஷியிடம் கெஜ்ரிவால் கேட்டறிந்தார்.
இந்த சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய மந்திரி அதிஷி, "சிறையில் கெஜ்ரிவாலை சந்தித்தபோது, அவரது உடல்நலம் குறித்து கேட்டேன். அதற்கு அவர், தன்னைப்பற்றியும், தனது உடல்நிலை பற்றியும் கவலைப்பட வேண்டாம் எனக்கூறினார்.
மாறாக பள்ளிக்குழந்தைகளுக்கு புத்தகங்கள் கிடைக்கிறதா? படிப்பதற்கு ஏதாவது சிரமங்கள் எதிர்கொள்கிறார்களா? மொகல்லா ஆஸ்பத்திரிகளில் மருந்து தட்டுப்பாடு நீங்கி விட்டதா? என கேட்டார்.
இந்த கோடையில் டெல்லி மக்களுக்கு எந்தவித குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார். அதற்கேற்ப போதிய குடிநீர் வினியோகத்தை மேம்படுத்துமாறு வலியுறுத்திய அவர், இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
மேலும் பெண்களுக்கு அவர் ஒரு செய்தியை கூறினார். அதாவது சிறையில் இருந்து விரைவில் வெளிவந்து, தான் அவர்களுக்கு வாக்களித்திருந்த ரூ.1000 ஊக்கத்தொகையை வழங்குவேன் என்று தெரிவித்தார். இதற்காக திட்டம் ஒன்றை அவர் தயாரித்து இருக்கிறார்.
கெஜ்ரிவாலை சந்திப்பதற்கு அவரது மனைவிக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டது, பா.ஜனதாவின் சர்வாதிகாரம். கெஜ்ரிவாலை ஒருமுறை 2 பேர் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அதை அவர்கள் திடீரென ரத்து செய்து விட்டனர். என்ன மாதிரியான சதி இது?
நீங்கள் அவரை துன்புறுத்த விரும்புகிறீர்கள். ஆங்கிலேய ஆட்சியில் கூட இத்தகைய சர்வாதிகாரம் இல்லை. அரசியல் கைதிகள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்.
கெஜ்ரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி மறுத்த பிரச்சினையை நாங்கள் எழுப்பிய பிறகு அவர்கள் பின்வாங்கினார்கள். அதன்பின்னரே அனுமதி அளிக்கப்பட்டது" என்று டெல்லி மந்திரி அதிஷி கூறினார்.