12-ம் தேதிக்கு பிறகு விசாரணைக்கு ஆஜராக தயார் - அரவிந்த் கெஜ்ரிவால்
|தேதியை தெரிவித்தால் காணொலியில் விசாரணைக்கு ஆஜராவதாக அமலாக்கத்துறைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட கட்சியான ஆம் ஆத்மி மீது தற்போது பல்வேறு ஊழல் புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டெல்லி ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த புதிய மதுபான கொள்கை கெஜ்ரிவாலுக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது.
மதுபான கொள்கையில் உள்ள சில தகவல்கள் முன்கூட்டியே கசிய விடப்பட்டு அதன் மூலம் ஆதாயம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்த கொள்கையை ஆம் ஆத்மி அரசு திரும்பப் பெற்றது. மதுபான கொள்கையில் ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளது. சட்டவிரோதப் பரிவர்த்தனை நடைபெற்றது என சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் எம்.பி உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். இதே வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அமலாக்கத்துறை ஏற்கனவே 7 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் 7 முறையும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. தேர்தலுக்கு முன்பாக அமலாக்கத்துறை மூலமாக தன்னை கைது செய்து பிரசாரம் செய்வதை தடுக்க பா.ஜ.க முயல்வதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டி வருகிறார்.
தன்னை கைது செய்த பின்னர் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டு டெல்லியில் புதிய ஆட்சி அமைக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது எனவும் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 8-வது முறையாக சம்மன் அனுப்பி இருக்கிறது . அமலாக்கத்துறை அனுப்பிய இந்த சம்மனை ஏற்று கெஜ்ரிவால் ஆஜராவாரா? அல்லது முந்தைய சம்மன்களை புறக்கணித்தது போல தற்போதும் ஆஜராகாமல் புறக்கணிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு டெல்லி அரசியலில் ஏற்பட்டு இருந்தது.
இந்த நிலையில், அமலாக்கத்துறைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதில் அனுப்பியுள்ளார்.
அதில், சம்மன் அனுப்பியது சட்டவிரோதமானது என்றும், ஆனால் அதற்கு பதிலளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 12-ம் தேதிக்கு பிறகு விசாரணைக்கு ஆஜராக தயாராக உள்ளதாக அமலாக்கத்துறைக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார். தேதியை தெரிவித்தால் காணொளியில் விசாரணைக்கு ஆஜராவதாக கூறியுள்ளார்.