பாஜக பிடியில் இருந்த டெல்லி மாநகராட்சியை கைப்பற்றி ஆம் ஆத்மி அமோக வெற்றி...!
|டெல்லி மாநகராட்சி தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 126 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.
புதுடெல்லி,
டெல்லி மாநகராட்சிக்கு கடந்த 4-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. டெல்லியில் வடக்கு, தெற்கு, கிழக்கு என 3 ஆக இருந்த மாநகராட்சி ஒன்றாக இணைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. டெல்லி மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கும் சேர்ந்து 50 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. டெல்லி மாநகராட்சி தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இந்த வாக்குகளை எண்ணும் 42 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையே இழுபறி நீடித்து வந்தது. ஆனால், கடைசி சுற்றுகளில் ஆதிக்கம் செலுத்திய ஆம் ஆத்மி கட்சி வெற்றிக்கு தேவையான 136 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது.
டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 136 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.
பாஜக - 100, காங்கிரஸ் - 10, பிற கட்சிகள் - 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
மாநகராட்சி தேர்தலில் ஆட்சி அமைக்க 126 இடங்கள் பெரும்பான்மை தேவை என்ற நிலையில் 136 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றியதையடுத்து ஆம் ஆத்மி தொண்டர்கள் பசுமை பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் தங்களது வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
சுல்தான்புரி தொகுதியில் வெற்றி பெற்ற திருநங்கை ஆம் ஆத்மி வேட்பாளர் போபி கூறுகையில், "எனக்காக கடுமையாக உழைத்த கட்சியினருக்கு எனது வெற்றியை அர்ப்பணிக்க விரும்புகிறேன். அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இனி எனது பகுதியின் வளர்ச்சிக்காக நான் கடுமையாக உழைப்பேன் என்றார்.