< Back
தேசிய செய்திகள்
கெஜ்ரிவாலிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை- இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த திட்டம்
தேசிய செய்திகள்

கெஜ்ரிவாலிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை- இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த திட்டம்

தினத்தந்தி
|
22 March 2024 9:05 AM IST

கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி,

டெல்லி மதுபானக்கொள்கை முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கின் அடிப்படையில் நிதி மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் விசாரணையை தொடங்கியது. இதனால் மதுபானக்கொள்கை முறைகேடு விவகாரம் டெல்லி அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் ஆளும் ஆம் ஆத்மி தலைவர்கள் மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகளும், தெலுங்கானா எம்.எல்.சி.யுமான கவிதா போன்ற முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் மீதான பிடியும் இறுகியது. விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் நிராகரித்தார்.

விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததுடன், சம்மனை எதிர்த்து அவர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள், கெஜ்ரிவால் மீதான சட்ட நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுத்தனர். இந்த தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில், கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரது வீட்டுக்கு சென்ற அதிகாரிகள் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தி அதன்பின் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்திவருகின்றனர். இன்று நாடு முழுவதும் போராட்டம் நடத்த அக்கட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் அழைப்பு விடுத்தார். இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுப்பதற்காக டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநில போலீசாருடன் இணைந்து சி.ஆர்.பி.எப். மற்றும் அதிரடிப்படை வீரர்களும் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் வைத்து கெஜ்ரிவாலிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல்நிலையை பரிசோதனை செய்வதற்காக டாக்டர்கள் குழு, அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்தனர். இன்றைய விசாரணைக்குப் பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்த திட்டமிட்டுள்ளனர். அப்போது அவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக மனு தாக்கல் செய்யலாம் என தெரிகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னதாக முதல்-மந்திரி கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என அவரது கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். அத்துடன், கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கெஜ்ரிவால் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சி கூட்டணியின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று கெஜ்ரிவாலின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்