< Back
தேசிய செய்திகள்
விவசாயிகள் போராட்டம்: அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் -  டெல்லி வியாபாரிகள் கவலை
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டம்: அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் - டெல்லி வியாபாரிகள் கவலை

தினத்தந்தி
|
15 Feb 2024 1:27 AM IST

விவசாயிகளின் போராட்டத்தால் டெல்லி எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் தொடங்கி உள்ளனர். எனவே டெல்லி எல்லைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு டெல்லிக்கு செல்லும் லாரிகள் ஆங்காங்கே முடங்கி உள்ளன.

இதனால் டெல்லியில் மேற்படி பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக பெருவணிகர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக மொத்த வியாபாரி ஒருவர் கூறும்போது, 'டெல்லிக்கான வினியோகம் தற்போது வரை பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. இருப்பினும், அத்தியாவசிய பொருட்கள் டெல்லிக்குள் வருவதில் சிறிது தாமதம் உள்ளது. போராட்டம் நீடித்தால் விலை அதிகரிப்பதை தடுக்க முடியாது' என்று கூறினார்.

மேலும் விவசாயிகள் போராட்டத்தால் டெல்லியில் உள்ள வணிக வளாக பகுதிக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 75 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்