< Back
தேசிய செய்திகள்
டெல்லி:  சீன மாஞ்சா காற்றாடி உற்பத்தி, விற்பனைக்கு தடை; மீறுவோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
தேசிய செய்திகள்

டெல்லி: சீன மாஞ்சா காற்றாடி உற்பத்தி, விற்பனைக்கு தடை; மீறுவோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

தினத்தந்தி
|
8 Aug 2022 2:18 PM IST

டெல்லியில் சீன மாஞ்சா காற்றாடி உற்பத்தி, விற்பனைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்து, மீறுவோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உள்ளது.



புதுடெல்லி,



டெல்லி ஐகோர்ட்டில் சன்சார் பால்சிங் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், வானில் பட்டம் பறக்க விடுவோர் அதில், கண்ணாடி பூசப்பட்ட அல்லது உலோகம் கொண்டு செய்யப்பட்ட சரம் அல்லது கயிற்று நூலை பயன்படுத்த முயலுகின்றனர்.

சீன மாஞ்சா காற்றாடி என அழைக்கப்படும் இதனால், மனிதர்கள், பறவைகள் உள்ளிட்டோருக்கு உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது. பலர் உயிரிழக்கின்றனர். படுகாயமும் அடைகின்றனர். இந்த காற்றாடி விபத்தில் குற்றவாளியை பிடிப்பது, அவர்களை பொறுப்பேற்க கூறுவது கடினம். இந்த சம்பவங்கள் தொடராமல் தடுக்க, முழு அளவில் தடை விதிப்பது மட்டுமே தீர்வாக இருக்கும் என தெரிவித்து உள்ளார்.

இந்த வழக்கில், தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதிக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், அதற்கு உரிய பதிலை தாக்கல் செய்ய டெல்லி போலீசாருக்கு உத்தரவிட்டது.

இதுபற்றி மத்திய அரசு வழக்கறிஞர் அனில் சோதி கூறும்போது, இந்த விவகாரத்தில் முன்பே தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுகளை வெளியிட்டு உள்ளது. சீன மாஞ்சா காற்றாடிக்கு முன்பே தடை விதிக்கப்பட்டு உள்ளது என கூறினார்.

இந்நிலையில், தென்கிழக்கு டெல்லி துணை காவல் ஆணையாளர் ஈஷா பாண்டே இன்று கூறும்போது, சீன மாஞ்சா காற்றாடிகளை விற்பனை செய்யவோ, அவற்றை உற்பத்தி செய்யவோ அல்லது பயன்படுத்துவதற்கோ தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்து உள்ளது.

இந்த உத்தரவை மீறுவது கண்டறியப்பட்டால், அதற்காக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். தேவையற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன என அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் தென்கிழக்கு டெல்லி மாவட்டத்தில் முன்பே 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விட்டன என்றும் டி.சி.பி. ஈஷா பாண்டே கூறி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

மேலும் செய்திகள்