டெல்லி: 6 மத்திய மந்திரிகளுடன் ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சந்திப்பு
|ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு டெல்லியில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட 6 மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து பேசினார்.
புதுடெல்லி,
ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு டெல்லிக்கு இன்று பயணம் மேற்கொண்டார். இதில் டெல்லியில் அவர் 6 மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து மாநிலத்திற்கு தேவையான கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.
இதன்படி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்த அவர், கிரேஹவுண்ட்ஸ் பயிற்சி மையம் அமைக்க நிலத்திற்கு தேவையான ரூ.385 கோடியை விடுவிக்கும்படி கேட்டு கொண்டார். இதுபோக ரூ.27.54 கோடிக்கான செலவின தொகையையும் வழங்கும்படி கேட்டு கொண்டார்.
இதேபோன்று, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரியை நேரில் சந்தித்து, வெளிவட்ட சாலை திட்டம் பற்றி எடுத்து கூறினார்.
இதேபோன்று, மத்திய வர்த்தக துறை மந்திரி பியூஷ் கோயல், மத்திய வேளாண் துறை மந்திரி சிவராஜ் சிங் சவுகான், மத்திய மின்துறை மந்திரி மனோகர் லால் கட்டார், மத்திய பெட்ரோலிய துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி ஆகியோரையும் சந்தித்து மாநிலத்திற்கு வேண்டிய கோரிக்கைகளை முன்வைத்து பேசியுள்ளார். இதற்கு முன், டெல்லியில் அவர் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார்.