அனுமதியின்றி யாசின்மாலிக் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர்: திகார் சிறை அதிகாரிகள் 4 பேர் பணியிடை நீக்கம்
|அனுமதி இன்றி காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின்மாலிக்கை சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர்படுத்திய டெல்லி திகார் சிறை அதிகாரிகள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
யாசின் மாலிக்
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் (வயது 57). பயங்கரவாதத்துக்கு ஆதரவாக செயல்பட்டு நிதிஉதவி அளித்ததை சுட்டிக்காட்டி இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தண்டனையின் பேரில் டெல்லி திகாரில் 7-ம் எண் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
கோர்ட்டில் ஆஜர்
யாசின் மாலிக் மீது உள்ள மற்ற வழக்குகளில் காணொலி காட்சி மூலமே விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் யாசின் மாலிக் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அதாவது கடந்த 1989-ம் ஆண்டு மத்திய மந்திரியாக இருந்த முப்தி முகமது சயீத்தின் மகள் ருபையா சயித் கடத்தப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடைய வழக்கு இது. இந்த வழக்கில் ஜம்மு விசாரணை கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சி.பி.ஐ. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது துப்பாக்கி ஏந்திய போலீஸ்படை புடைசூழ யாசின் மாலிக், கோர்ட்டு அறைக்குள் நுழைந்தார். இது அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கோர்ட்டு உத்தரவு இல்லாமல் அவர் ஆஜர்படுத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கண்டனம் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணை முடிந்து யாசின் மாலிக் மீண்டும் திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறை அறையில் அடைக்கப்பட்டார்.
அஜய்பல்லாவுக்கு கடிதம்
இதனைத்தொடர்ந்து துஷார் மேத்தா, மத்திய அரசின் உள்துறை செயலாளர் அஜய் பல்லாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். கோர்ட்டு உத்தரவு இன்றி யாசின் மாலிக் நேரடியாக ஆஜர்படுத்தப்பட்டது கடுமையான பாதுகாப்பு குறைபாடு என கடிதத்தில் வருத்தம் தெரிவித்த அவர், யாசின் மாலிக் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தப்பியிருக்கலாம், அல்லது வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டிருக்கலாம், அல்லது கொல்லப்பட்டிருக்கலாம். இப்படி ஏதேனும் நடந்தால் யார் பொறுப்பாவது? எனவே அனுமதின்றி அவரை விசாரணைக்கு அழைத்து வந்த சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
4 பேர் இடைநீக்கம்
அதன்பேரில் யாசின் மாலிக்கை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு காரணமாக இருந்த ஒரு துணை கண்காணிப்பாளர், 2 உதவி கண்காணிப்பாளர்கள் மற்றும் ஒரு தலைமை வார்டர் ஆகிய 4 பேரை இடைநீக்கம் செய்து சிறைத்துறை டி.ஜி.பி. சஞ்சய் பெனிவால் உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி 3 நாளில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டு உள்ளது. சிறைத்துறை டி.ஐ.ஜி. ராஜீவ் சிங் இதுகுறித்த விசாரணையில் இறங்கியுள்ளார்.