பாதுகாப்புக்கான உறுதியான உத்தரவாதம் இல்லையெனில் போராட்டம் தொடரும்: டாக்டர்கள் கூட்டமைப்பு
|டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைகளின் பாதுகாப்பிற்கான நீண்டகால, கடுமையான சட்டம் வேண்டும் என டாக்டர்கள் கூட்டமைப்பு கேட்டு கொண்டுள்ளது.
புதுடெல்லி,
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இதில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி கொடூர கொலை செய்யப்பட்டார். அரை நிர்வாண கோலத்தில் உயிரிழந்த நிலையில் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர், 23-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து, பல்வேறு பகுதிகளிலும் பயிற்சி டாக்டர்கள் கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் இன்றும் தொடர்ந்தது.
இந்நிலையில், பயிற்சி டாக்டர்கள் கூட்டமைப்பின் தலைவரான டாக்டர் இந்திரா சேகர் பிரசாத் இன்று கூறும்போது, கொல்கத்தாவில் நடந்த சம்பவம் ஒரேயொரு முறை நடந்த சம்பவம் இல்லை. நாட்டில் தினசரி இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
டாக்டராக இருப்பது என்பது உன்னத பணி. கோவில் போன்ற சூழலில் நாங்கள் பணியாற்றுகிறோம். நாங்கள் பாதுகாப்பாக இல்லை எனில், நோயாளிகள் பாதுகாப்பை எப்படி உணருவார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
டாக்டர்களுக்கு பாதுகாப்புக்கான உறுதியான உத்தரவாதம் வேண்டும். டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைகளின் பாதுகாப்பிற்கான நீண்டகால, கடுமையான சட்டம் வேண்டும். அப்படி இல்லையெனில் போராட்டம் தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.