< Back
தேசிய செய்திகள்
ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 70 பயிற்சி விமானங்கள், 3 கப்பல்கள் வாங்க ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம்
தேசிய செய்திகள்

ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 70 பயிற்சி விமானங்கள், 3 கப்பல்கள் வாங்க ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம்

தினத்தந்தி
|
8 March 2023 4:47 AM IST

ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 70 பயிற்சி விமானங்கள், 3 பயிற்சி கப்பல்கள் வாங்க ராணுவ அமைச்சகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

புதுடெல்லி,

ராணுவ அமைச்சகம் நேற்று 2 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இந்திய விமானப்படைக்கு எச்டிடி-40 ரகத்தை சேர்ந்த 70 அடிப்படை பயிற்சி விமானங்களை வாங்க பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் கையெழுத்திட்டது.

ரூ.6 ஆயிரத்து 800 கோடி செலவில் இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன. இவை குறைந்த வேகத்தில் கையாளக்கூடியவை. விமானிகள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பயிற்சி அளிக்க பயன்படுத்தப்படும்.

இந்த விமானங்களில் 60 சதவீதம்வரை உள்நாட்டு உதிரிபாகங்கள் பயன்படுத்தப்படும். படிப்படியாக 6 ஆண்டுகளில் எல்லா விமானங்களும் ஒப்படைக்கப்படும்.

3 பயிற்சி கப்பல்கள்

இதுபோல், 3 பயிற்சி கப்பல்கள் வாங்க எல் அண்ட் டி நிறுவனத்துடன் ராணுவ அமைச்சகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ரூ.3 ஆயிரத்து 100 கோடி செலவில் இவை வாங்கப்படுகின்றன.

கடற்படை பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் ஆண், பெண்களுக்கு அடிப்படை பயிற்சிக்கு பிறகு இந்த கப்பல்களில் பயிற்சி அளிக்கப்படும். அண்டை நாடுகளின் கடற்படை வீரர்களுக்கும் இந்த பயிற்சி அளிக்கப்படும். மேலும், பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் பயன்படுத்தப்படும்.

காட்டுப்பள்ளியில் கட்டுமான பணி

சென்னை அருகே காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்தில் இக்கப்பல்கள் கட்டப்படும். கப்பல்களை ஒப்படைக்கும் பணி, 2026-ம் ஆண்டில் இருந்து தொடங்கும்.

விமானம், கப்பல் கட்டும் பணியில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது. ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் முன்னிலையில் இரு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன. பாதுகாப்பு செயலாளர் கிரிதர் அரமானே மற்றும் அமைச்சக உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கடந்த 1-ந்தேதி, பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இந்த கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்