கடற்படைக்கு ரூ.19 ஆயிரம் கோடியில் 5 கப்பல்கள் - பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்
|கடற்படைக்கு ரூ.19 ஆயிரம் கோடியில் 5 கப்பல்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
புதுடெல்லி,
இந்திய கடற்படைக்கு கப்பல்களை வாங்குவதற்கு கடந்த 16-ந் தேதி நடந்த மத்திய மந்திரிசபை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதையடுத்து, 5 கப்பல்களை கட்டுவதற்கு விசாகப்பட்டினம் இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று ஒப்பந்தம் செய்தது. ரூ.19 ஆயிரம் கோடியில் இந்த கப்பல்கள் கட்டப்படும். இவை சுமார் 44 ஆயிரம் டன் எடை கொண்டவையாக இருக்கும். இந்த வகையான கப்பல்கள் உள்நாட்டிலேயே வடிவமைத்து கட்டப்படுவது இது முதல்முறை ஆகும். எனவே இது பாதுகாப்புத்துறையில் சுயசார்புக்கு ஊக்கம் அளிக்கும் என பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த துணை கப்பல்கள், கடலில் உள்ள கடற்படை கப்பல்களுக்கு தேவையான வெடிபொருட்கள், எரிபொருள், நீர், உணவுப்பொருட்கள் உள்ளிட்டவற்றை கொண்டு சென்று வழங்கி ஆதரவாக செயல்படும். அதனால் கடற்படை கப்பல்கள் பல நாட்களுக்கு துறைமுகத்துக்கு திரும்பாமல் கடலில் இயங்க முடியும். மேலும் அவசரகாலத்தில் ஆட்களை அப்புறப்படுத்துவது, மனிதாபிமான மற்றும் பேரிடர் கால மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கும் இந்த கப்பல்கள் பயன்படுத்தப்படும்.