ரூ.70 ஆயிரம் கோடி ராணுவ தளவாடங்கள் கொள்முதல் - மத்திய அரசு ஒப்புதல்
|ரூ.70 ஆயிரத்து 584 கோடி மதிப்புள்ள உள்நாட்டு ராணுவ தளவாடங்கள் கொள்முதலுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
புதுடெல்லி,
முப்படைகளுக்கு தேவையான தளவாடங்களை கொள்முதல் செய்ய ராணுவ மந்திரி தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் இயங்கி வருகிறது.
இந்த கவுன்சிலின் கூட்டம், ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில், ரூ.70 ஆயிரத்து 584 கோடி மதிப்புள்ள ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இவற்றில், 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள தளவாடங்கள், இந்திய கடற்படைக்கு வாங்கப்படுகின்றன.
இந்த தளவாடங்கள் அனைத்தும் முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. 'பிரமோஸ்' ஏவுகணைகள், கடல்சார் டீசல் என்ஜின், பீரங்கி, போர் சீருடைகள், ஹெலிகாப்டர்கள், கடல்சார் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை அடங்கும்.
கடல்சார் டீசல் என்ஜின்
இந்திய கடலோர காவல்படைக்கு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து அட்வான்ஸ்டு இலகுரக ஹெலிகாப்டர்கள் வாங்கப்படுகின்றன. இதில் பொருத்தப்படும் சென்சார்கள், கடற்பகுதியை கண்காணிக்க பயன்படும்.
நடுத்தர வேகத்தில் செல்லக்கூடிய கடல்சார் டீசல் என்ஜின் வாங்க ஒப்புதல் அளித்தது முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது. முதல்முறையாக இத்தகைய என்ஜின்களை உள்நாட்டிலேயே இந்தியா தயாரித்துள்ளது.
தற்சார்பு இந்தியா
3 ஆண்டுகளாக, கிழக்கு லடாக்கில் சீன படைகளுடன் மோதல்போக்கு நிலவி வரும் நிலையில், இந்த ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, 'தற்சார்பு இந்தியா' இலக்கை எட்டுவதற்கு உதவுவதுடன், ஆயுதங்களுக்கு வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைக்கும் என்று ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.