கர்நாடகத்தின் முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா மீதான மானநஷ்ட வழக்கு தள்ளுபடி
|கர்நாடகத்தின் முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா மீதான மானநஷ்ட வழக்கு கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
பெங்களூரு,
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா, சிறைக்குள் இருந்த போது சொகுசு வசதிகளைப் பெற 2 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கியதாக அப்போதைய சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா குற்றம் சாட்டினார்.
இதில் சிறைத்துறை இயக்குனர் சத்தியநாராயணாவுக்கு பங்கு இருப்பதாகவும் ரூபா புகார் தெரிவித்தால், அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாக ரூபா மீது, சத்தியநாராயணா மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி ரூபா தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகப்பிரசன்னா, பதவிக்கு உட்பட்டு துறை ரீதியான நடவடிக்கைகளையே ரூபா மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் ரூபா எந்த சட்டத்திட்டத்தையும் மீறி நடக்கவில்லை என்று தெரிவித்த நீதிபதி, அவர் மீது தொடரப்பட்ட மானநஷ்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.