< Back
தேசிய செய்திகள்
அமித்ஷா குறித்து அவதூறு: ராகுல் காந்தி மீதான வழக்கு ஒத்திவைப்பு
தேசிய செய்திகள்

அமித்ஷா குறித்து அவதூறு: ராகுல் காந்தி மீதான வழக்கு ஒத்திவைப்பு

தினத்தந்தி
|
2 April 2024 5:39 PM IST

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஏப்ரல் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

லக்னோ,

கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக தேர்தலின்போது மத்திய மந்திரி அமித்ஷா குறித்து ராகுல்காந்தி அவதூறாக பேசியதாக பா.ஜ.க.வை சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவர் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ந் தேதி வழக்கு தொடர்ந்தார்.பா.ஜனதா கட்சி நேர்மையான மற்றும் தூய்மையான அரசியலை நம்புவதாக கூறுகிறது. ஆனால் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கட்சி தலைவராக இருக்கிறார் என்று ராகுல் காந்தி கூறியதை புகாராக அவர் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கில் கடந்த பிப். 20-ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு நடைபெற்றது. விசாரணைக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று ராகுல் காந்திக்கு சம்மனும் அனுப்பப்பட்டிருந்தது. பாரத் ஜடோ நியாய யாத்திரையில் இருந்த ராகுல் காந்தி, நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் கோரினார். இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து அவர் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த பிப். 23-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தியின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும் இந்த வழக்கின் மீதான விசாரணை சுல்தான்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (ஏப்ரல் 4) கடைசி என்பதால் ராகுல் காந்தியின் விசாரணை மற்றொரு நாள் தள்ளிவைக்கக் கோரி, காங்கிரஸ் தலைவரின் வழக்கறிஞர் காஷி பிரசாத் சுக்லா நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தார். இதையடுத்து, ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு மீதான விசாரணை ஏப்ரல் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்