< Back
தேசிய செய்திகள்
போலீஸ் நற்பெயருக்கே அவமதிப்பு; கேரளாவில் மாம்பழங்களை திருடி, சிக்கிய காவல் அதிகாரி பணிநீக்கம்
தேசிய செய்திகள்

போலீஸ் நற்பெயருக்கே அவமதிப்பு; கேரளாவில் மாம்பழங்களை திருடி, சிக்கிய காவல் அதிகாரி பணிநீக்கம்

தினத்தந்தி
|
27 April 2023 4:14 PM IST

கேரளாவில் மாம்பழங்களை திருடி, சிக்கிய காவல் அதிகாரி போலீஸ் நற்பெயருக்கு அவமதிப்பு ஏற்படுத்தியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் காவல் துறை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் ஷிஹாப். இவர் மீது முண்டக்கயாம் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவாகி உள்ளது. இதற்கான விசாரணை நடந்து வந்த சூழலில், கடந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில், பணி முடிந்து கோட்டயத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பி உள்ளார்.

அவர் வரும் வழியில் கஞ்சிரப்பள்ளி என்ற இடத்தில் பழக்கடை ஒன்று இருந்து உள்ளது. அதில், இருந்த பழங்களை யாருக்கும் தெரியாமல் திருடியுள்ளார். ரூ.600 மதிப்புடைய 10 கிலோ வரையிலான மாம்பழங்களை அள்ளி கொண்டு தனது பைக்கில் பறந்து விட்டார்.

ஆனால், இந்த சம்பவம் சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகி இருந்தது. பழக்கடை ஒன்றில் இருந்து காவல் அதிகாரி ஒருவர் மாம்பழங்களை திருடி சென்ற வீடியோ வைரலானது.

இதனை தொடர்ந்து ஷிஹாப் தலைமறைவானார். பழக்கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் ஷிஹாப் மீது வழக்கு பதிவானது. இதனால், இடுக்கி மாவட்ட காவல் அதிகாரி, அவரை பணியில் இருந்து சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

காவல் துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்த இந்த செயலை முடித்து வைக்க முயற்சி நடந்தது. கடை உரிமையாளர் புகாரை வாபஸ் பெற்றார். கோர்ட்டும், வழக்கை முடிக்க ஒப்புதல் வழங்கியது.

இத்துடன் இந்த வழக்கை முடித்து கொள்ள ஷிஹாப் முயன்றபோதும், அவர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில், பாலியல் வழக்கும் ஒன்று ஆகும்.

இதனால் இடுக்கி எஸ்.பி., காவல் துறையின் நற்பெயருக்கே அவமதிப்பு ஏற்பட்டு விட்டது என கூறி உள்துறையிடம் ஷிஹாப்பை பணியில் இருந்து நீக்கும்படி அறிவுறுத்தல் வழங்கினார். இதனை அடுத்து அவரை பணியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்