< Back
தேசிய செய்திகள்
Rahul Gandhi
தேசிய செய்திகள்

அவதூறு வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி 26ம் தேதி நேரில் ஆஜராக உ.பி. கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
2 July 2024 4:00 PM IST

அவதூறு வழக்கு தொடர்பான விசாரணைக்காக ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

லக்னோ,

கடந்த 2018-ம் ஆண்டு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆட்சேபத்திற்குரிய கருத்துகளை பேசியதாக கூறி, பா.ஜ.க.வை சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவர் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த பிப்ரவரி 20-ந்தேதி அமேதியில் நடந்த பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தற்காலிகமாக நிறுத்திவிட்டு ராகுல் காந்தி கோர்ட்டில் ஆஜரானார். அப்போது அவருக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து இந்த வழக்கு கடந்த மாதம் 26ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தி 2ம் தேதி (அதாவது இன்று) விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என கோர்ட்டு உத்தவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காசி பிரசாத் சுக்லா கூறுகையில், ராகுல் காந்தி இன்று கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டியிருந்தது, ஆனால் நடந்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் காரணமாக அவரால் நேரில் ஆஜராக முடியவில்லை. இதனால் இந்த வழக்கை விசாரிக்க புதிய தேதியை அறிவிக்குமாறு கோரிக்கை வைத்தார். அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த நீதிபதி ஷுபம் வர்மா, வரும் 26ம் தேதி ராகுல் காந்தியை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்