சூரத் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக குஜராத் ஐகோர்ட்டில் ராகுல் காந்தி மனு
|கிரிமினல் அவதூறு வழக்கில் சூரத் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக குஜராத் ஐகோர்ட்டில் ராகுல் காந்தி நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.
எம்.பி. பதவி நீக்கம்
பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்த சர்ச்சை கருத்து தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது சூரத் பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பூர்னேஷ் மோடி தொடர்ந்த இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த மாதம் 23-ந்தேதி தீர்ப்பு கூறப்பட்டது.
அதையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ராகுல் காந்தி அவரது வயநாடு தொகுதி எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராகுல் காந்தி ஜாமீன் பெற்றுள்ளார்.
ஐகோர்ட்டில் மனு
இதற்கிடையில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்க கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை சூரத் செசன்ஸ் கோர்ட்டு கடந்த வாரம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அந்த உத்தரவை எதிர்த்து குஜராத் ஐகோர்ட்டில் ராகுல் காந்தி நேற்று மனு தாக்கல் செய்துள்ளார். அதை காங்கிரஸ் கட்சி வக்கீல் பி.எம்.மங்குகியா உறுதிசெய்துள்ளார்.