ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு: 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு
|ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
லக்னோ,
கடந்த 2018-ம் ஆண்டு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆட்சேபத்திற்குரிய கருத்துகளை பேசியதாக கூறி, பா.ஜ.க.வைச் சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவர் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த பிப்ரவரி 20-ந்தேதி அமேதியில் நடந்த பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தற்காலிகமாக நிறுத்திவிட்டு ராகுல் காந்தி கோர்ட்டில் ஆஜரானார். அப்போது அவருக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. பின்னா் வெவ்வேறு காரணங்களால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விஜய் மிஸ்ரா தரப்பில் ஆஜரான வழக்கறிஞா் சந்தோஷ் குமார் பாண்டேவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்த வழக்கு விசாரணை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ராகுல் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் காஷி பிரசாத் சுக்லா தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக செப். 21ம் தேதியும் பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த சுகாதார முகாம் காரணமாக விசாரணை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.