பா.ஜ.க.வுக்கு எதிரான அவதூறு வழக்கு; சித்தராமையா, டி.கே. சிவக்குமாருக்கு கர்நாடக கோர்ட்டு ஜாமீன்
|கர்நாடகாவில் பா.ஜ.க. தலைவர்கள், 40 சதவீத கமிஷன் வாங்கினர் என்று குற்றச்சாட்டு கூறியதுடன், முன்னாள் அரசுக்கு எதிராக ஊழல் விகித அட்டையையும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டு இருந்தது.
பெங்களூரு,
பா.ஜ.க.வுக்கு எதிரான அவதூறு வழக்கு ஒன்றில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் ஆகியோருக்கு, 42-வது கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டு இன்று ஜாமீன் வழங்கியது.
பா.ஜ.க. எம்.எல்.சி. மற்றும் பொது செயலாளரான கேசவ் பிரசாத் மவுரியா தாக்கல் செய்த இந்த வழக்கில், பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்ட, எங்களுடைய கட்சி தலைவர்களுக்கு எதிராக பொய்யான விளம்பரங்களை காங்கிரசார் பரப்பி வருகின்றனர் என குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.
இதன்படி, சித்தராமையா, டி.கே. சிவக்குமார் மற்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவாகி இருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு சித்தராமையா, டி.கே. சிவக்குமார் ஆகிய இருவரும் இன்று நேரில் ஆஜரானார்கள். பின்னர், அவர்கள் இருவருக்கும் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
இதேபோன்று, பா.ஜ.க. தலைவர்கள், அனைத்து பொதுப்பணி துறை சார்ந்த பணிகளை நிறைவேற்ற 40 சதவீத கமிஷன் வாங்கினர் என்று குற்றச்சாட்டு கூறியதுடன், பா.ஜ.க. அரசுக்கு எதிராக ஊழல் விகித அட்டையையும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டு இருந்தது.